தமிழக செய்திகள்

முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரீக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் ராஜ்மோகன்

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் விசிகதான் தூண் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி உடனான கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் தவெக - விசிக கூட்டணி, கொள்கைக் கூட்டணி எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்குள் பாமக வரவுள்ளதாகவும் தவெக அமைச்சரவையில் அக்கட்சி இடம்பெறவுள்ளதாகவும் கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், அதற்கு பாமக தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே விசிக நிகழ்ச்சியொன்றில் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக மற்றும் பாமக உள்ள அணியில் விசிக இடம்பெறாது என மீண்டும் உறுதி தெரிவித்தார்

இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மதச்சார்பற்ற சமூகநீதிக் கூட்டணியில் விசிக ஒரு தூணாக இருக்கிறது. எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. நிறைய பேர் கருத்துகளைச் சொல்லலாம். ஆனால், உண்மைத்தன்மை எங்களுக்கு தெரியும். அண்ணன் திருமா அவர்கள் எங்கள் தாய் சிறுத்தை. திருமாவும் முதல்வரும் இணைந்து இருப்பது ஒரு கொள்கைக் கூட்டணி

மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்

"முதல்-அமைச்சரின் நாகரிக அரசியலுக்கு எடுத்துக்காட்டு பிரதமர் மோடியுடனான சந்திப்பு. நட்பு அரசியலுக்கு எடுத்துக்காட்டு ராகுல் காந்தியுடனான சந்திப்பு. ராகுல் காந்தியுடன் தவெக தலைவராகச் செயல்பட்டார்; பிரதமர் மோடியுடன் தமிழக முதல்-அமைச்சராக செயல்பட்டார். முதல்-அமைச்சரிடம் இருந்து நாகரிக அரசியலை மற்ற தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; பெற்றுக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு கேக்

"முதல்-அமைச்சர் சார்பில் கேக் வழங்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் மீது எப்போதும் தனி பாசம் உள்ளது. அந்த அன்பிற்கு விலையே இல்லை. குழந்தைகள் காட்டக்கூடிய அந்த அன்பிற்கு ஆன பிரதிபலன் தான் குட்டீஸ்க்கு குட்டி கேக். ஒவ்வொரு குழந்தையும் கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சர் நினைக்கிறார். அத்தனை குழந்தைகளையும் கொண்டாடுவதற்காகத்தான் கேக்கை பரிசாக கொடுத்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு

மெட்ரோ திட்ட பணிகள் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு என்கிறார்கள், அதற்கான நிதி அண்ணா அறிவாலயத்தில் இருந்தா கொண்டு வரப்பட்டது? அல்லது செனடாப் ரோடு, கோபாலபுரத்தில் இருந்து நிதி வந்ததா? மக்கள் வரிப்பணத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள். எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் நாங்கள் தொடங்கியது என கூறுகிறார்கள், அப்படி எனில் நடக்கும் கொலை, கொள்ளை சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் சீரழிவுக்கு யார் காரணம்?

மேலும் மக்கள் நல பணிகள் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. இது தொடக்கம் மட்டுமே, இன்னும் மக்கள் பயன்படக்கூடிய திட்டங்கள் வெகு விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT