சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் வெகுவிரைவில் தாக்கல் செய்து, அனுமதி பெற்று மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டுவோம் என்றும் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். எந்தத் தேவையும் இல்லாமல் கட்டப்படும் மேகதாது அணையால் பாதிக்கப்படும் தமிழ்நாட்டிற்கு அத்திட்டத்தை எதிர்க்க உரிமையில்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை முதல்-மந்திரியும், நீர்ப்பாசனத் துறை மந்திரியுமான டி.கே.சிவக்குமார்,‘‘ தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் வழங்க வேண்டும் என்பது தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அதைக் கடந்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மேகதாது அணைக்கான புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது. அதை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்து, அனுமதி கிடைத்தவுடன் புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்படும். அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன’’ என்று கூறியிருக்கிறார். இது மேகதாது அணை சிக்கலை திசை திருப்பும் செயலாகும்.
மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தில் கூட விவாதிக்கக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஏனென்றால், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு பெறவே கூடாது என்பது தான் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சம் ஆகும். 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் இதை உறுதி செய்திருந்தார். மேலும், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை குறித்த விண்ணப்பத்தை கர்நாடகம் தாக்கல் செய்தால் அது திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இது தான் மிகவும் சரியான நிலைப்பாடு.
ஆனால், அதை மீறி, மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி அளித்ததும், அதனடிப்படையில் கர்நாடக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியதும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செய்யப்பட்ட துரோகங்கள் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதன் அடிப்படையில் தான், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முந்தைய திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது. ஆனால், அந்த வழக்கை திமுக அரசு சரியாக நடத்தாததால் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையே தமக்கு சாதகமான தீர்ப்பாக எடுத்துக் கொண்டு மேகதாது அணையை கட்டி முடிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சதி செய்கிறது.
70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்தக் கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரித்து விடும். அதன்பின், இப்போது கிடைக்கும் வெள்ள நீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. எனவே, இந்த சிக்கலில் கர்நாடக காங்கிரஸ் அரசின் சதித் திட்டங்களை விழிப்புடன் செயல்பட்டு தமிழக அரசு தடுக்க வேண்டும். அதற்காக, மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு புதிதாக தயாரித்திருக்கும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகம் பெற்றுக் கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.