தமிழக செய்திகள்

மேகதாது விவகாரம்: மாநிலங்களின் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை - எல்.முருகன் பேட்டி

12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

புதுவை,

புதுவையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"பிரதமர் நரேந்திர மோடி 4,402 நாட்களாக நாட்டின் பிரதமராக இருந்து சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார்.

கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீண்டுள்ளனர். 81 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. சுய உதவிக்குழுக்களின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்த 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் மேம்பட்டுள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 12 கோடிக்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய பெருமையை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்தது. காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டு தமிழர் பண்பாடு உலக அரங்கில் எடுத்துச் செல்லப்பட்டது. நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதன் மூலம் தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கப்பட்டுள்ளது."

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேகதாது அணை விவகாரத்தில் நமக்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. மாநிலங்களின் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.