தமிழக செய்திகள்

மேகதாது விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய் வாய்திறக்க மறுக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

டெல்டா விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மேகதாது அணை குறித்து முதல்-அமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வாய்திறக்கவே மறுக்கிறார்

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் மாதாந்திர வாரியாக வழங்கப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பை பெற்று தந்திருக்கிறோம். அந்த தீர்ப்பை கூட அமல்படுத்த முடியாத கையாலாகாத அரசாக இந்த அரசு இருக்கிறது. டெல்டா விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.

கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் ஒவ்வொரு நாளும் மேகதாது, காவிரி குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் விஜய் இதுகுறித்து இப்போதுவரை வாய்திறக்கவே மறுக்கிறார். இனியாவது மேகதாது அணை குறித்து முதல்-அமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

"வெற்றி" மாடல் புத்தகம்

முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருந்ததாவது, “காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது சுப்ரீம்கோர்ட்டு. இந்த அவமானம் "வெற்றி" மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப் போகிறது?. காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மாட்டீர்கள். காங்கிரஸ் கட்சியோடு காவிரி குறித்து பேசமாட்டீர்கள். சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்த மாட்டீர்கள்.

தமிழ்நாட்டுக்கு நேரெதிராக பேசிவரும் கர்நாடக முதல்-மந்திரியை ஒரு வார்த்தைகூட கண்டிக்க வக்கில்லாமல், டெல்லியில் அவரோடு போட்டோவுக்கு 'போஸ்' கொடுக்கிறீர்கள். ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க முடியாமல் ஏற்கெனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனது. தற்போதும் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்காமல் இருப்பதாலும், நமக்கு உரிமையான நீரைப் பெற முடியாமல் இங்குள்ள தவெக கூட்டணி அரசாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல், இந்த அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது.

குடி இல்லையேல் கோன் எதற்கு?

டெல்லிக்கு போய் சோனியா காந்தியின் குடும்பக் கதையை கேட்டு சிரிக்க இருந்த நேரம், தமிழக விவசாயிகளைப் பற்றி பேச கொஞ்சம் கூட இல்லையா?. எப்போது பார்த்தாலும் "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்" என்று நீலிக்கண்ணீர் வடிப்பீர்களே- உங்கள் ஆச்சரியக்குறி ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு கொடுத்து வரும் அவமானங்களை எல்லாம் பார்த்தால், "உங்கள் சுயநலத்துக்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களோ?" என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு, விவசாய மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, நான் என தொடர்ந்து அதிமுக கடுமையான, போராட்டங்களுக்கு பிறகு பெற்ற உரிமை இது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி நமது உரிமையை நிலைநாட்டினோம். நீர் இன்றி நெல் இல்லை. நெல் இன்றி குடி இல்லை. குடி இல்லையேல் கோன் எதற்கு? என்று கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்" என்று தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT