கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மேகதாது விவகாரம்: சீராய்வு மனு தள்ளுபடி... தமிழகத்திற்கு பின்னடைவு - அன்புமணி ராமதாஸ்

மேகதாது திட்ட அறிக்கை தயாரிப்புக்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்யும் நிலை உருவாகியிருப்பது தமிழகத்திற்கு பின்னடைவு ஆகும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு 22.11.2018ம் நாள் மத்திய நீர்வள ஆணையம் சட்டவிரோதமாக அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகம் தாக்கல் செய்தது. அதை ஆய்வு செய்து மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டது. எனினும், தமிழகத்தின் தொடர் எதிர்ப்பு காரணமாக விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் விரிவான திட்ட அறிக்கை நீர்வள ஆணையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.

இத்தகைய சூழலில் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் நாள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி என்பது முதற்கட்ட நடவடிக்கை மட்டும்தான்; இதை அணை கட்டுவதற்கான அனுமதியாக கருத முடியாது என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு அதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து அணை கட்ட அனுமதிக்கலாம் என்றும் கூறியுள்ளது. தமிழக அரசு விரும்பினால் மேகதாது அணை கட்டுவதற்கான எதிர்ப்பை காவிரி மேலாண்மை ஆணையத்தில் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தான் காவிரி பாசன மாவட்டங்களுக்கு பெரும் பாதகமாக அமையும்.

திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதி முதற்கட்ட நடவடிக்கைதான் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பதை ஏற்க முடியாது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்கள் பறிக்கப்படுவதற்கு அது தான் தொடக்கமாக அமையும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, கர்நாடக அரசு புதிய விரிவான திட்ட அறிக்கையை தயாரித்திருக்கிறது. வெகு விரைவில் அந்த அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து, மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு தன்னிச்சையாக அனுமதி கொடுத்தால், காவிரி ஆற்றில் தமிழகத்தின் உரிமைகள் அத்துடன் பறிக்கப்பட்டு விடும். இது நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

காவிரி ஆற்றின் குறுக்கே முதல்மடை மாநிலமான கர்நாடகத்தில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்கக்கூடாது என்பது தான் 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு ஆகும். இந்தத் தீர்ப்பை 16.02.2018-ம் தேதியிட்ட தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதன் பொருள் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை குறித்த விண்ணப்பத்தைக் கூட மத்திய அரசு பெறக்கூடாது என்பது தான். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி எனக்கு எழுதிய கடிதத்தில் உறுதி செய்திருந்தார்.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைத் தொடர்ந்து மேகதாது அணை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தமிழகத்திற்கு எதிர்ப்புக்கு பயன் இல்லாமல் போகலாம். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மேகதாது அணை கட்ட ஆணையம் அனுமதி அளித்தால் அத்துடன் தமிழகத்தின் உரிமைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும். அதன்பின் தமிழ்நாட்டுக்கு காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்பது தான் கசப்பான உண்மை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் 2018-ம் ஆண்டில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பாமக கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் தான் திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், அதன் பின் வந்த திமுக அரசு அந்த வழக்கில் வலிமையான வாதங்களை வைக்கத் தவறியது தான் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இப்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம்.

இப்போதுள்ள சூழலில், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கவும், மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்தவும் தமிழகத்தின் முன் உள்ள ஒரே வாய்ப்பு மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வைப்பது தான். அதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர் அரசியல் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.