திருமாவளவன் 
தமிழக செய்திகள்

தமிழ்நாடு அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது: திருமாவளவன்

காவிரியின் குறுக்கே மேகாதாதுவில் புதிய அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா பேசி வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காவிரி நீர் பிரச்சினை அல்லது மேகதாது அணை விவகாரம் என்பது இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை கிடையாது. இது மத்திய அரசு மற்றும் இரு மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்சினையாகும்.கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது.

தீர்வு காண முடியாது

மத்திய அரசு அமைக்கும் ஆணையங்கள், குழுக்கள் மற்றும் அவற்றுக்கு மேலாக உச்சநீதிமன்றத்துக்கும் இந்த விவகாரத்தில் அதிகாரம் உள்ளது.காங்கிரஸ் கட்சி நினைத்தாலும் இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண முடியாது. வேண்டுமானால் சிறிது காலத்துக்கு பிரச்சினையை கட்டுப்படுத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ முடியும். ஆனால், காங்கிரஸ் ஆட்சி மாறி வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இந்தப் பிரச்சினை தலைதூக்கும்.

கர்நாடக விவசாயிகளே எதிர்ப்பு

மேலும், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக விவசாயிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதுதான் உண்மை. புதிய அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை.தமிழக அரசின் ஒப்புதலும் அனுமதியும் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. எனவே, காங்கிரஸ் கட்சி நினைத்தால் இந்த விவகாரத்தை தீர்க்கலாம் அல்லது தடுக்கலாம் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தால், இந்தக் கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT