சென்னை,
மேகதாதுவில் அணை கட்ட புதிய விரிவானத் திட்டம் மத்திய அரசிடம் வழங்கப்படும் என டி.கே. சிவக்குமார் கூறியுள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்காக புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் அவர், “காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எவ்வித உரிமையும் இல்லை. இது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றமே அணை கட்ட பச்சைக்கொடியை காட்டியுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான அலுவலகத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகு, இத்திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெறும். மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் அரசு உறுதியாகவுள்ளது” என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி நீரைத் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என்று தெளிவான ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக துணை முதல்-மந்திரி கூறியுள்ள மேற்கண்ட கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், நதிநீர் பிரச்சனைகள் தொடர்பான சட்ட நெறிமுறைகளுக்கும் எதிரானது. மேலும் ஆறுகள் தோன்றி பாயும் பகுதிகளில் உள்ள நாடுகள் கடைமடை பகுதியில் உள்ள மாநிலங்களின் அனுமதியின்றி அணைகளை கட்டுவது கூடாது.
அவ்வாறிருக்க கர்நாடகத்தில் அணைக் கட்ட தமிழகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. காவிரி நதி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் செயலாகும்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கான நீர்வரத்து குறையும். இது தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனை, பொருளாதாரத்தை பாதிக்கும். மாநிலங்களிடையேயான உறவையும், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டையும் பாதிக்கும். எனவே இத்தகைய முயற்சியை கர்நாடக மாநிலம் உடனடியாக கைவிட வேண்டும். மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிடக்கூடாது. தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாத்திட, மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்திட உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.