சென்னை,
மத்திய பா.ஜ.க. அரசில் அன்புமணி, அவருக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நேற்று (ஜூலை 30) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி, ‘ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை வரும், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டிற்கு எதிரானது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்று சொல்வாரா? அப்படி சொன்னால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறத் தயார்" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு - கர்நாடகம் இடையிலான காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது பிரதமர் நரேந்திர மோடியின் கடமையும், பொறுப்பும் ஆகும். இந்த ஆண்டு மழை பொய்த்ததால், காவிரியில் இருந்து, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை.
இந்நிலையில், ‘தமிழ்நாட்டிற்கு, தினமும் 3,500 கன அடி வீதம், அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்" என, கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரு மாநில முதல்வர்களுடன் பேச்சு நடத்தி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை, செயல்படுத்த வைக்க வேண்டியது பிரதமர் நரேந்திர மோடியின் கடமை. ஆனால் அந்த கடமையிலிருந்து பிரதமர் மோடி தவறுகிறார் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் குற்றச்சாட்டு. நாம் அனைவரும் இதைத்தான் கண்டிக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார். பிரதமர் மோடியை எளிதில் அணுகக்கூடிய நிலையிலும் இருக்கிறார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேசி, காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்கவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவரிடம் இருந்து இதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதற்கு மாறாக, தேவையில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை வம்புக்கு இழுப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. அவர் பிரதமர் ஆனதும் இந்த கோரிக்கையை அன்புமணி வைக்கலாம்.
காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்க வேண்டும், தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் நியாயத்திற்காக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எப்போதும் குரல் கொடுப்பார்கள். காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் அரசியல் செய்ய விரும்பவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று, தமிழ்நாட்டின் குரலை உரக்க வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.
எனவே, அன்புமணி அவர்கள் இதில் அரசியலை தவிர்த்து, மத்திய பாஜக அரசில் அவருக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.