சென்னை,
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை புறக்கணிக்கும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் கருத்து ஏற்புடையதல்ல...சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசு மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தல். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டதாகவும் கர்நாடக மாநில முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழக விவசாயிகளிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
காவிரி என்பது கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் உயிர்நாடியாகவும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. காவிரி நீர் என்பது கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கும் சலுகையல்ல, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பாலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவாலும் உறுதிசெய்யப்பட்ட தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையாகும்.
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து விட்டதாக கர்நாடக முதல்-மந்திரி கருதுவது ஏற்புடையதல்ல. திட்டத்தின் விரிவான அறிக்கை, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளின் கருத்துகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடைமுறைகள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
மேலும், காவிரிப் படுகை திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களை எதிர்த்து, தமிழக அரசு கடந்த 03.08.2026 அன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட்டில் வலுவான சட்ட வாதங்களை முன்வைத்து, மேகதாது அணை திட்டத்திற்கு உரிய சட்ட நடைமுறைகள் முடிவடையும் முன்பு எந்தவித அனுமதியும் வழங்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நியாயமான நீர்ப்பங்கீட்டு உரிமைகளை பாதுகாக்க அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியும், உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கைத் தீவிரப்படுத்தி, தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், காவிரி நீர்ப்பங்கீட்டு உரிமையையும் பாதுகாப்பதில் இந்திய ஜனநாயகக் கட்சி என்றும் உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.