வேலூரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் நலன்களை முன்னிறுத்தி நல்ல முடிவுகளை எடுக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தால்கூட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.சேலம் மாணவி உட்பட பல மாணவர்கள் ‘நீட்’ தேர்வினால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக உயிரிழந்திருப்பது கவலையளிக்கிறது. தமிழ்நாடு அரசு இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். சட்ட வல்லுனர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் கலந்து பேசி, சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.வை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது என்பதை திராவிட அரசியலின் மீது நம்பிக்கை உள்ளவன் என்ற அடிப்படையில் தேர்தலுக்கு முன்பே நான் சுட்டிக்காட்டியிருந்தேன். இதுதொடர்பாக அ.தி.மு.க.வினர் என்னை விமர்சித்தார்கள். ஆனால் இன்றைக்கு அ.தி.மு.க.வின் நிலை கவலையளிப்பதாக மாறி உள்ளது. இதுபற்றி அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.ஆணவ படுகொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நீண்டகாலமாக சமூகத்தில் நிலவி வரும் பிரச்சினையாகும். தவிர்க்க முடியாத நிலையில் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியது போன்று, ஆணவ படுகொலைகளை தடுக்கவும் முதல்-அமைச்சர் விஜய் உரிய கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக தோழமை கட்சிகளுடன் இணைந்து முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.
நாடாளுமன்றத்தை போன்று சட்டமன்ற நிகழ்வுகளும் முழுமையாக நேரலை செய்யப்பட வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக முதல்-அமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.பா.ஜனதாவில் இருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக கூறி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்ட அவர், பா.ஜனதா தலைவர்களின் ஒப்புதலோடு புதிய கட்சியை தொடங்குகிறார்.அண்ணாமலை பா.ஜனதாவின் செயல் திட்டங்களோடுதான், வேறொரு முகமூடியுடன் களம் இறங்குகிறார் என்ற ஐயம் எழுகிறது. அவர் பா.ஜனதா அரசியலை வேறு வடிவத்தில் கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை எளிதாக அடையாளம் கண்டு நிராகரிப்பார்கள், ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.