சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பினர் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
“இலங்கைத் தீவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டு மற்றும் தமிழர் தாயகக் கோட்பாடையே சிதைக்கும் இனஅழிப்பின் சாட்சியங்களாக தீவின் ஈழத்தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களான ஈழத்தின் திருகோணமலை மாவட்ட சாந்தமலர் அந்தோனிஜோன்சன், மட்டக்களப்பு மாவட்ட லக்ஸ்மணரஜனி ஜெயப்பிரகாசி, அம்பாறை மாவட்ட சிந்துஜா சௌயன், முல்லைத்தீவு மாவட்ட ஜெகதாம்பிகை விக்கினேஸ்வரன், வவுனியா மாவட்ட சரோஜா குகநேசதாசன்,
மன்னார் மாவட்ட பற்றீசியா அலெக்ஸ், கிளிநொச்சி மாவட்ட வன்செலீன் கந்தசாமி, சுபதர்சினி சச்சிதானந்தம், யாழ்ப்பாண மாவட்ட ஜமுனா சந்திரகுமார், விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் ஆகிய பத்து பெண்கள் அடங்கிய ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பினர் நேரில் சந்தித்து ஏற்கனவே இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் பெரும் அர்ப்பணிப்போடு இயங்கிய தமிழக தொப்புள்கொடி உறவுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.