தமிழக செய்திகள்

‘எஸ்.ஜானகி பாடிய பாடல்களின் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

பாடகி எஸ்.ஜானகியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-

“பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ். ஜானகி அம்மாள் காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், மைசூருவில் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. 1957-ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்த ஜானகி, 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 48,000-த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் என்பது மாபெரும் சாதனையாகும். அவர் நான்கு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் அவர். அவரது தாய் மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழிப் பாடல்களையும் மிகச் சிறப்பாக, இனிமையாகப் பாடியவராவார். தான் பாடிய பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவராவார்.

அவர் பாடிய பாடல்களின் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும். ஜானகி அம்மாள் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.