திருச்சி,
திருச்சி மஞ்சத்திடலில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5-வது மெமு ரெயில் பராமரிப்பு பணிமனை மையம் வருகிற ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மஞ்சத்திடல் ரெயில் நிலையம் அருகே ரூ.61 கோடி மதிப்பில் மெமு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை கட்டப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளதாகவும், இந்த பணிமனையில் தலா 12 பெட்டிகள் கொண்ட 2 மெமு ரெயில்களை ஒரே நேரத்தில் முழுமையாக ஆய்வு செய்து பராமரிக்கும் வசதியும், 2 ரெயில்களை ஒரே நேரத்தில் தூய்மைப்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிமனை பயன்பாட்டிற்கு வந்ததும் இதன் மூலம் திருச்சி மற்றும் மதுரை கோட்டங்களில் இயக்கப்படும் அதிவேக மின்சார மெமு ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தற்போது டீசல் மூலம் இயங்கும் மெமு ரெயில்களை இயக்கி வரும் ஒரே கோட்டமாக திருச்சி உள்ளது.
புதிய பணிமனை பயன்பாட்டுக்கு வந்தவுடன், டீசல் ரெயில்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் அதிவேக மெமு ரெயில்கள் இயக்கப்படும். இதேபோல் குறுகிய தூர பயணிகள் ரெயில்கள் அனைத்தும் படிப்படியாக மெமு ரெயில்களாக மாற்றப்பட உள்ளன. தற்போது ஆவடி, தாம்பரம், பாலக்காடு மற்றும் கொல்லம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே மெமு பணிமனைகள் உள்ளன. இதனை தொடர்ந்து 5-வதாக திருச்சியில் இந்தப் பணிமனை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது தயாராகி வரும் மெமு ரெயில் பணிமனையின் வேலை முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது மின்சார வினியோகத்தை நிறுத்தி வைக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பழைய மின் கம்பங்கள், மின் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றும் பணிகள் இந்த வாரம் நடைபெற உள் ளது. மேலும் இந்த பணிகள் எல்லாம் முடிந்து இந்த பணிமனை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரலாம் என தெரிவித்துள்ளனர்.