சென்னை,
நீட் தேர்வு நாளை மறுநாள் (மே 3) நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) வருகின்ற 03.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே 'டெலி கவுன்சிலிங்' (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.