கோவை,
கோவை கணபதி தங்கம்மாள் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி நர்மதா. இந்த தம்பதிக்கு (17 வயது) என்ற மகள் இருந்தார். யாழினி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அத்துடன் பிளஸ்-2 பொதுத்தேர்வையும் எழுதினார். அவர் நன்றாக படித்து வந்ததால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் யாழினி தேர்ச்சி பெற்றதுடன் 454 மதிப்பெண் பெற்று இருந்தார். தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மன உளைச்சல் அடைந்த அவர் தனது தாய் நர்மதாவிடம் கூறி அழுது புலம்பினார். இதனால் தனது மகளுக்கு நர்மதா ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவி யாழினி தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நர்மதா, உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகளை மீட்டு கணபதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே யாழினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.