தஞ்சை,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. தென்னை ஓலையில் வெள்ளை ஈக்கள், 50 முதல் 65 முட்டைகள் வரை சுருள் வடிவில் இடுகின்றன. இந்த முட்டைகள் 4 முதல் 7 நாட்களில் குஞ்சு பொறித்து, ஓலையில் சாறு உறிஞ்ச தொடங்குகின்றன. வளர்ச்சியடைந்த நிலையில், பறக்கத் தொடங்கி அருகில் உள்ள மரங்கள், தோப்புகளுக்கு பரவுகின்றன. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை இரவு 7 முதல் 11 மணி வரை எரிய விட்டு, கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை, நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் கட்டலாம் அல்லது, மரத்தின் தண்டுப் பகுதியில், சுற்றி விடலாம். பாதிப்புள்ள மரங்களின் ஒலைகள் மீது தண்ணீரை விசைத் தெளிப்பான் வாயிலாக அதிக அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்து, வெள்ளை ஈக்கள் மற்றும் முட்டைகளை அழிக்கலாம்.
உயிரியல் முறையில் கட்டுப்படுத்த கிரைசோபெர்லா ஒட்டுண்ணிகள் ஏக்கருக்கு 500 எண்ணிக்கையில் ஓலைகளின் அடிப்பகுதியில் கட்டினால். வெள்ளை ஈக்களின் புழுக்களை உட்கொண்டு அழிக்கும். காக்ஸினெல் லிட் பொறிவண்டு மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஓலையில் வைத்தால், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும். தெளிப்பு முறையை கையாள விரும்பினால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி., வேப்பெண்ணெய் அல்லது 2 மி.லி., அசாடிராக்டின் கலந்து அத்துடன், 1 மி.லி. ஒட்டு திரவம் கலந்து ஓலைகளின் அடிப்பகுதியில் தெளிக்கலாம்.
மேலும், வெள்ளை ஈ பாதிப்புள்ள தோப்புகளில், பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருந்தால், இயற்கை எதிரிகள் பெருகி, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் தற்போது கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் வெள்ளை ஈ தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. எனவே அதை கட்டுப்படுத்துவது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.