சென்னை,
சென்னை விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி இன்று மாலை மெட்ரோ ரெயில் சென்றுகொண்டிருந்தது. ரெயிலானது சென்னை திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையத்தில் ரெயில் நின்றது. அப்போது ரெயிலுக்குள் இருந்த பயணிகள் ரெயிலை விட்டு இறங்க முற்பட்டனர். ஆனால் திடீரென ரெயிலின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தது.
மெட்ரோ ரயிலின் கதவுகள் சுமார் 15 நிமிடங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் பயணிகள் இறங்கவும் ஏறவும் முடியாமல் தவித்தனர். கதவுகள் திறக்கப்படாததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பழுது காரணமாக ரெயிலின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. தகவலறிந்து விரைந்து வந்த மெட்ரோ ஊழியர்கள், திறக்கப்படாமல் இருந்த கதவுகளில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர். இதன் பின் பயணிகள் ரெயிலை விட்டு வெளியே வந்தனர். இந்த திடீர் கோளாறால் மெட்ரோ ரெயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் தாமதமானது.