தமிழக செய்திகள்

பூந்தமல்லி - வடபழனி இடையே விரைவில் மெட்ரோ ரெயில் சேவை

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை மட்டுமே வழங்கியிருந்தார்.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்டப் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இந்த வழித்தடத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். குறைபாடுகள் சரி செய்யப்பட்டன. 5-வது பாதுகாப்பு ஆய்வுக்கு பிறகு சமீபத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

ரெயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் தலைமையிலான குழுவினர் - இந்த பாதையில் உள்ள நிலையங்களை பார்வையிட்டதை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூத்தமல்லி மற்றும் போரூர் இடையே உள்ள அனைத்து நிலையங்களிலும் ரெயில்கள் நின்று செல்லும். அனுமதி கிடைக்கப்பட்டதால் எப்போது வேண்டுமானாலும் திறந்து வைக்கப்படலாம் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.

10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில்

பூந்தமல்லி- வடபழனி இடையே 14.6 கி.மீட்டர் நீளப்பாதையில் வேகம் தொடர்பான தளர்வுகளுடன் ரெயில்களை இயக்குவதற்கான அனுமதி பெற்றது. இந்த அனுமதியின் படி இந்தப் பாதையில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலை இயக்க முடியும். முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை மட்டுமே வழங்கியிருந்தார். அப்போது பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையில் இயக்க இடைவெளி 15 நிமிடங்களாகவும் வடபழனி நிலையப்பகுதி காரிடர் 5-ன் இரட்டை அடுக்கு மேம்பால பகுதியில் 26 டெக் ஸ்லாப்கள் கட்டப்பட்ட பின்னரே முழுமையாக செயல்பட முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே தற்போதைய வேக கட்டுப்பாடு எதுவும் இல்லை. போரூர் முதல் வடபழனி வரையிலான பாதையில் ரெயில்களில் வேகம் மணிக்கு 25 கி.மீ.என்ற அளவிலிருந்து 40 கிலோ மீட்டராக உயர்த்தப் பட்டு உள்ளது. இந்தப் பாதையில் ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 32 கிலோ மீட்டராக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே பூந்தமல்லி பைபாஸ், முல்லை தோட்டம், கரையன்சாவடி, குமணன் சாவடி, அய்யப்பன் தாங்கல், தெள்ளியகரம் போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரெயில்கள் நின்று செல்லும், போரூர் சந்திப்பிற்குப் பிறகு ரெயில்கள் வடபழனியில் மட்டுமே நிற்கும் என்று அதிகாரிகள் கூறினர்.