தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில்: கலங்கரை விளக்கம்-திருமயிலை இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

சென்னையில் மெட்ரோ ரெயில் 2ஆம் கட்டம் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் “பிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை வந்தடைந்தது

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரெயில் நிலையங்கள் கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டம் 2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல், UG-01 ஒப்பந்தத்தின் கீழ், “பிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்திலிருந்து (downline) சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை இன்று 27.02.2026 வந்தடைந்தது. இதற்கு முன்னதாக, இதே ஒப்பந்தத்தின் கீழ் “கழுகு” சுரங்கம் தோண்டும் இயந்திரம், கடந்த 09.02.2026 அன்று (upline) சுரங்கப்பாதை அமைக்கும் பணியை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

(M/s Cemindia Projects) நிறுவனத்தால் 1,985 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சுரங்கம் அமைக்கும் பணி சென்னையின் மிகவும் முக்கியமான மற்றும் நெரிசலான பகுதிகளின் வழியே செல்கிறது. குறிப்பாக சென்னை கலங்கரை விளக்கம், அகில இந்திய வானொலி நிலையம், ரஷ்ய தூதரகம், ரோசரி தேவாலயம் மற்றும் பறக்கும் ரெயில் (MRTS) பாலம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான கட்டிடங்களுக்கு அடியில் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது. இந்தப் பணியின் போது, பாறை அடுக்குகள், இரண்டு சுரங்கங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டதால் (Stacked tunnel) உருவான அதிகப்படியான ஆழம் மற்றும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட எரிவாயு கசிவு (Gas pockets) போன்ற சவாலான புவியியல் சூழல்களைக் கடந்து இந்தத் துளையிடும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்தப்பகுதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கழுகு (Eagle) மற்றும் பிளமிங்கோ (Flamingo) என பெயரிடப்பட்ட இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்தியது. இன்றைய மைல்கல் சாதனையின் மூலம், UG-01 தொகுப்பின் கீழ் உள்ள கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை இடையேயான இரண்டு சுரங்கப் பாதைகளும் தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்போது மயிலாப்பூர், லஸ் கார்னர் மற்றும் மத்திய சென்னை இடையேயான போக்குவரத்து இணைப்பை பெருமளவில் மேம்படுத்தும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிக உயர்ந்த பொறியியல் மற்றும் பாதுகாப்புத் தரங்களைக் கடைப்பிடித்து, 1981 மீட்டர் நீளமுள்ள இந்த சிக்கலான சுரங்கப் பாதை பணி பாதுகாப்பாக முடிக்கப்பட்டுள்ளது. பிளமிங்கோ (Flamingo) மற்றும் கழுகு (Eagle) என்று அழைக்கப்படும் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும், இப்போது திருமயிலையிலிருந்து போட் கிளப் (Boat Club) நோக்கி அடுத்தகட்டப் பணிகளுக்காக மீண்டும் இயக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமைப் பொது மேலாளர் ஆர். முரளி (நிதி), பொது மேலாளர் ஆர்.ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் குழுத் தலைவர் .சி.முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், ITD சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON கன்சோர்டியம் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.