தமிழக செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 60 அடிக்கு கீழ் சரிவு

மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.

சேலம்,

பருவநிலை மாற்றம் மற்றும் எல்நினோவின் தாக்கம் காரணமாக மேட்டூர் அணையின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழை குறைந்துள்ளது. இதனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டது.

வழக்கமாக ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் அந்த மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 792 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 787 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59.58 அடியாக உள்ளது. அணையில் 24.37 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சரிவை சந்தித்து வரக்கூடிய மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு, டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். இன்று வரைக்கும் 44 டி.எம்.சி. தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டிருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், 45 நாட்களுக்கான அந்த கால வரம்பு நிறைவடைய உள்ள சூழலில், அணையின் நீர்மட்டமும் சரிந்து வருவதால், அணையில் இருந்து திறக்கப்படும் நீர் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதனால் சம்பா பயிரை காப்பாற்றுவதற்கு நீர் தொடர்ந்து வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT