மேட்டூர்,
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக கடந்த 2-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,312 கனஅடியாக அதிகரித்தது.
பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை அளவு படிப்படியாக குறைந்து உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக மீண்டும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,223 கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 760 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பை விட அணைக்கு வரும் நீர்வரத்தானது குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம் 79.86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலையில் 79.82 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மழை பெய்ய வேண்டும் என்று வருணபகவானை வேண்டி வருகின்றனர்.