சென்னை,
மேட்டூர் அணையிலிருந்து பயிரின் தேவைக்கேற்ப நீரை திறக்க வேண்டும்என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தின் பெரும் பகுதி பாதுகாப்பான வருமானம் தரும் சம்பா, தாளடி நெல் சாகுபடி மற்றும் மானாவரி தானிய சாகுபடியில் நீர் மற்றும் காலச் சூழல் நெருக்கடியில்... விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள், தொழில்நுட்பம், சிறப்பு நிதி உதவி திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்திட வலியுறுத்தல்,
குறுவை நெல் சாகுபடிக்கும்,குடிநீருக்கும் மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 1 முதல் 10,000 கன. அடி திறக்கப்பட்டது. திறக்கப்படும் தண்ணீர் குடிநீர் தேவைக்கு, நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு அவசியம் தேவை என்கிற அடிப்படையில் குறைந்த தண்ணீரை திறந்து இருக்க வேண்டும். அரசு அறிவித்தது போல் விவசாயத்திற்கு இது பயன்படாது என அப்பொழுதே செய்தி கொடுத்தோம்.
இது தற்போதைய நிலையில் அறிய முடியும். வழக்கமாக 6 லட்சம் ஏக்கர் என்பதில், நிலத்தடி நீர் கொண்டு குறுவை நெல் சாகுபடி செய்த 1.5 லட்சம் ஏக்கரில் ஒரு பகுதி நீரில்லாமல் கருகி போனது. காலநிலை உணர்ந்து காலத்தில் விவசாயிகளை அரசு கலந்து பேசி இருக்க வேண்டும்.
இதனால் கடந்த 25 நாட்களாக திறக்கப்பட்ட தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் போனது. பாதுகாப்பான நீண்டகால நெல் ரகங்களை பயிரிட காலத்தில் நீர் கிடைக்காது, குறுகிய கால விதைகளை வேறு வழியின்றி விவசாயிகள் விதைத்து உள்ளனர். தென்மேற்கு பருவ மழை உரிய அளவு இல்லை.காவிரி நீரும், இதுவரை பற்றாக்குறை கால நீர் பங்கீட்டை கூட கர்நாடகம் திறந்து விடவில்லை. இனி வடகிழக்கு பருவ மழை கிடைத்தால் மட்டுமே வாய்ப்பு. இதுவும் அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர் வரை பொழிய வாய்ப்பு உள்ளது என ஆய்வு வந்துள்ளது.
இந்த நிலையில் 3 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயரும் சூப்பர் எல் நினோவாக வர உள்ளது. இதனால் ஒரு பக்கம் உடன் வடிய இயலாத பெருவெள்ளம்,, மறுபக்கம் கூடுதல் வெப்பத்தால் கொதிநிலை ஏற்பட்டு வேளாண் உற்பத்தி மனித வாழ்வு நிலைகள் பாதிப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழக பல மாவட்டங்களில் வேளாண் மற்றும் வாழ்வாதாரங்கள் பேரிடரை தரும் என தெரிகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணை நீர் இருப்பை கவனத்தில் கொள்ளாது, பயிர் தேவைக்கேற்ப 12,000 க.அடி தண்ணீரை திறந்து, நிலத்தடி நீர் பாசனம் இல்லாத வெண்ணாற்றுக்கு கூடுதலாக திறந்திட வேண்டும். முறை பாசனம் வைத்து திறக்க வேண்டும்.
தற்போது தமிழக அணைகளில் 25 சதவீத அளவே நீர் இருப்பு திறக்கும் நிலையில் உள்ளது. பல அணைகள் காய்ந்து விட்டன. 63 அணைகளில் 25 சதவீதம் நீர் இருப்பு,,, 17 சதவீதம் அணைகளில் சராசரி 28 சதவீதம் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் உள்ள அணைகளில் 224 டி.எம்.சி. நீர் சேமிப்பு திறன் உள்ளது. இத்துடன் மழை நீரும் கிடைத்தால் தான் சாகுபடி உற்பத்தி சரியாக இருக்கும். இப்போது 74 டி.எம்.சி அதாவது 33 சதவீதம் நீர் இருப்பு மட்டுமே இருப்பு உள்ளது.
இந்நிலையில் நிலத்தடி நீர் எடுப்பும் கூடுதலாக வெளியேற்றப்படுகிறது. நிலநீர் செறிவுக்கு அணைகள் மற்றும் மலைவளம் தான் அடிப்படை. இதில் உரிய பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்திட வேண்டும். இந்த நிலையில் பருவமழையை பொறுத்து தான் நிலத்தடி நீர் உயரம். இல்லையேல் வரும் கோடையில் குடிநீருக்கும் அல்லாட வேண்டி இருக்கும். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கீழ்காணும் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என விழைகிறோம்.
மேட்டூர் அணையை திறக்கும் முன்னே நெல் சாகுபடி குறித்து விவசாயிகளிடம் விவாதித்து உரிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்திருக்க வேண்டும். இந்நிலையில் விவசாயிகள் வேறு வழியின்றி சாம்பா, தாளடிக்கு நெல் விதைப்பை தொடங்கி விட்டனர். எனவே அரசும் இதை பாதுகாக்கும் திட்ட உதவிகளை உடன் நடைமுறைபடுத்திட வேண்டும்.
அசாதாரண நெருக்கடி சூழலில்,, வேளாண் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் அனைவரையும் இணைத்திடும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தி அரசே காப்பு தொகை முழுவதையும் செலுத்திட வேண்டும். பயிரிட இயலாத காப்பீடு திட்ட முதல் கட்ட இழப்பீடு அல்லது பின் பயிரிட்டு கதிர் விடும் நிலையிலான பாதிப்பிற்கு காப்பீடு இழப்பு தொகையை விவசாயிகள் பெற்றிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பயிர் தேவைக்கேற்ப மேட்டூர் அணை நீர் திறப்பு செய்து முறை பாசனம் வைக்க வேண்டும். கடைமடை வரை பாசனத்தை உறுதிப்படுத்திட பாசன கண்காணிப்புக்கு சிறப்பு அலுவலர்களை நியமித்திட வேண்டும்.
டெல்டாவில் நீர் பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் விரும்பும் பகுதிகளில் நவம்பருக்கு பின் மாற்று பயிர் திட்டங்களை பரீசீலிக்கலாம்.
தென் மாவட்டங்கள்,வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மக்காச்சோளம், நிலக்கடலை, எள், உளுந்து, பாசிப்பயிறு தட்டைப்பயிறு, ராகி உள்ளிட்ட விவசாயிகள் விரும்பும் பயிர் சாகுபடி திட்டங்களை, தொழில் நுட்ப ஆலோசனையுடன் அரசு அமல்படுத்திட வேண்டும். தென் மாவட்டங்களில் மானாவரி பயிர்கள் தெளித்து பயனின்றி இரண்டாவது சாகுபடி செய்யப்படுகிறது.
நெல் சாகுபடி மற்றும் மாற்று பயிர்கள், மானாவரி சாகுபடி விவசாயிகளுக்கு சிறப்பு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவித்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.
வரும் பெருமழை வெள்ள ஆபத்திலிருந்து பாதுகாத்திட ஊரணிகள், கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், மழை வெள்ளநீர் வடிகால்கள் ஆகியவற்றின் கொள்மடை மற்றும் வடிமடைகளை ஒழுங்குபடுத்தி,,கரைகளை பலப்படுத்திட போர்க்கால நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஏதுவாக நிலுவையில் உள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். மேலும் அவசர நிலை கருதி எவ்வித நிபந்தனையும் இன்றி பயிரிடும் விவசாயிகள் அனைவருக்கும் புதிய பயிர்க்கடன்கள் வழங்கிட வேண்டும். மேலும் உடனடியாக விவசாயிகள் சங்க நிர்வாகிகளை கூட்டி, கலந்து பேசி நடைமுறைப்படுத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.