சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அந்த பெண் அதில் ஏற்றப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்சை ஓட்டுநர் குமரவேல் ஓட்டிச் சென்றார். மருத்துவ உதவியாளராக ரோஸி உடன் சென்றார்.
ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிலைமையை உணர்ந்த மருத்துவ உதவியாளர் ரோஸி உடனடியாக பிரசவம் பார்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஓட்டுநர் குமரவேலும் ஆம்புலன்சை பாதுகாப்பாக இயக்கி, பிரசவத்திற்கு தேவையான சூழலை ஏற்படுத்தினார்.
இதன் காரணமாக, ஆம்புலன்சிலேயே அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாய்க்கும், சேய்க்கும் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளனர்.
108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வரும் ரோஸி, இந்த பிரசவத்தையும் சேர்த்து இதுவரை 58 பிரசவங்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவசர நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தாயையும், சேயையும் பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்த்த ஓட்டுநர் குமரவேல் மற்றும் மருத்துவ உதவியாளர் ரோஸி ஆகியோரின் பணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.