சென்னை,
மிலாடி நபியை முன்னிட்டு இசுலாமிய மக்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள மிலாடி நபி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
அகிலத்தில் மனிதகுல விடுதலைக்காகவும், அறியாமை அழியவும் அயராது பாடுபட்டவர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்).
63 வயதான போதும் அவர்கள் மிக்க இளமையானவராகவே இருந்தார்கள். அன்பைப் பொழிவதிலும், ஆதரவற்றோர்களை அரவணைப்பதிலும், யுத்த களத்தில் எதிரிகளின் அருகே இருந்து போரிடுவதும், அநீதிகளை எதிர்த்ததும், அரிய செயல்கள் புரிந்ததும் என அகிலம் உள்ளவரை அண்ணலாரின் புகழ் அழியாது நிலைத்து நிற்கும்.
சகோதரத்துவத்தையும், சமாதானத்தையும், அகில உலகத்திற்கும் போதித்த அண்ணல் அவர்களின் பிறந்தநாள் சந்திர கணக்கின் படி 1501, சூரிய கணக்கின் படி 1456.
அண்ணலாரின் பிறந்தநாள் பெருமங்கலம் உலகெங்கும் ஆரவாரமாக கொண்டாடப்படுகிறது. அன்னைத் தமிழ்நாட்டிலும் அண்ணலாரின் பிறந்தநாளை அமைதியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடும் அன்பு நிறை இசுலாமிய பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.