மும்பை,
மராட்டிய மாநிலத்தில் பால் டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடிய பாலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு பிடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) விரார் நோக்கி அமுல் நிறுவனத்திற்கு சொந்தமான பால் டேங்கர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், தவா கிராமத்தின் அருகே உள்ள மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பிற்பகல் 3 மணி அளவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த டேங்கர் லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பலத்த சத்தத்துடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் தாக்கத்தால் டேங்கரின் மேல் பகுதி உடைந்து சேதமடைந்தது. இதனால் அதிலிருந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பால் சாலையில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. நெடுஞ்சாலையில் பால் ஆறாக ஓடுவதைக் கண்ட அக்கம் பக்கத்து கிராம மக்களும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தங்களின் வீடுகளில் இருந்து குடங்கள், வாளிகள், அண்டாக்கள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களை எடுத்துக்கொண்டு, சாலையில் ஓடிய பாலை போட்டி போட்டுக் கொண்டு பிடித்து சென்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து காசா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாலை பிடிக்க திரண்ட பொதுமக்களை அப்புறப்படுத்திய போலீசார், விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. எனினும், இச்சம்பவத்தால் மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.