தமிழக செய்திகள்

ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

இந்திய நாட்டிற்கு சிறப்பையும் தமிழகத்திற்குப் பெருமையையும் தேடித்தந்துள்ளனர்.

சென்னை,

இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா, ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்து

இந்த நிலையில், வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

வெண்கல பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் - ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய நாட்டிற்காக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோர் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Elite Scheme திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் இருவரும், இந்திய நாட்டிற்கு சிறப்பையும் தமிழகத்திற்குப் பெருமையையும் தேடித்தந்துள்ளனர்.

ஊக்கத்தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகையினை (High Cash Incentive) பெறும் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோர் இருவரும், இந்திய நாட்டிற்காக மேலும் பல சாதனைகள் படைக்க அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

தமிழக இளைஞர்கள் விளையாட்டின் மீது கொண்டுள்ள ஆர்வத்திற்கு புதிய உற்சாகத்தை நமது வீரர் - வீராங்கனையர்கள் தங்கள் வெற்றியின் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்கள் அனைவரின் லட்சியத்தோடு நமது தமிழ்நாடு அரசு உடன் நிற்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT