அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனாவால் 
தமிழக செய்திகள்

கடல்சார் திட்டங்களுக்கு நிதி கோரி டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனு

மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்த ரூ.1,200 கோடி வழங்குமாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை,

கடல்சார் திட்டங்களுக்கு நிதி கோரி டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை மனு அளித்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கோரிக்கை மனு

பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (17.11.2026) புதுடெல்லியில், மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனாவாலை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவிக்கான கோரிக்கை மனுவை அளித்தார்.

பின்வரும் திட்டங்களுக்கு உடனடி நிதியுதவி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

1. இராமேஸ்வர துறைமுக மேம்பாடு (இராமேஸ்வரம் – தலைமன்னார் (இலங்கை) பன்னாட்டு பயணிகள் படகு போக்குவரத்து துவங்குதல் – ரூ.118 கோடி

2. கடலூர் பசுமை வள ஆழ்கடல் துறைமுக மேம்பாடு – ரூ.4,700 கோடி

3. கடல் நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகள் அமைத்தல் (சென்னை மெரீனா, மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி) – சென்னை - புதுச்சேரி பயணிகள் படகு போக்குவரத்து துவக்குதல் – ரூ.900 கோடி

4. பக்கிங்காம் கால்வாய் புனரமைத்தல் மற்றும் ஆழப்படுத்துதல் (தேசிய நீர்வழி – 4) – ரூ.2,700 கோடி

5. மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்துதல் – ரூ.1,200 கோடி

இந்நிகழ்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அன்பழகன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT