சென்னை,
கடலோரப் பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் இன்று நடைபெற்றது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் கடலோரப் பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (12.11.2026) நடைபெற்றது.
தமிழ்நாட்டின் 1069 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடலோர பகுதியில் அமைந்துள்ள சிறுதுறைமுகங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், முக்கிய கட்டமைப்புகள், கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டன.
கடலோர பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், உள்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் அனு ஜார்ஜ், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ஜெயகாந்தன், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அன்பழகன், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஐ.ஜி. பர்வேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.