வேலூர்,
தவெகவினர் இனி பேனர்கள் வைப்பதைத் தவிர்த்து, அதற்காக செலவிடும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் வலியுறுத்தினார்.
வேலூர் மாவட்டம் அரியூரில் மாநில அளவிலான அபாகஸ் போட்டிகள் நடைபெற்றன. சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணா தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதாகர், சிந்து, தாஹீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் என். ஆனந்த் பேசியதாவது:-
மாணவர்கள் தங்களது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும். கைபேசி இல்லாமலேயே இவ்வளவு வேகமாக 130 கணக்குகளைப் போடுகிறீர்கள். நீங்கள் அனைவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக ஆவது மட்டுமின்றி, அரசியலுக்கும் வர வேண்டும். இப்போது லஞ்சமில்லாத அரசியல் இருக்கிறது. அரசியலில் கணக்குகள் போடலாம். ஆனால், மேலே உள்ள ஆண்டவன் ஒரு கணக்கு போடுகிறார். மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.
தற்போது என்னை வரவேற்று அதிக அளவில் பேனர்கள் வைத்திருந்தார்கள். முதல்-அமைச்சர் பேனர் கலாசாரம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். எனவே, தவெகவினர் இனி பேனர்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பேனர்கள் வைப்பதற்காக செலவிடும் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.