தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.இந்நிலையில் இன்று தாராபுரத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் கலந்துகொண்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்பட்டது.
ஏற்கனவே செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் மின்வெட்டு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதேபோல மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற ஒரு கூட்டத்திலும் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டது. உடனடியாக 'ஜெனெரேட்டர் போடுங்கள்' என்று கூற, ஜெனெரேட்டர் இயக்கப்பட்டதால் ஆதவ் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
தவெகவின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டங்களிலேயே மின்வெட்டு ஏற்பட்டது பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையே, இது குறித்து அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான புஸ்சி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் புஸ்சி ஆனந்த், "வேண்டுமென்றே சிலர் சதி செய்கிறார்கள், அதுயெல்லாம் சரி செய்யப்படும்" என்றார்.