தமிழக செய்திகள்

தஞ்சை புத்தகத் திருவிழா: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைக்கிறார்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார். இதில் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் நூல்கள் இடம் பெறுகின்றன.

தஞ்சாவூர்:

தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்குகிறார்.

இந்த புத்தகத் திருவிழாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த புத்தகத்திருவிழா தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடக்கிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 6.30 மணிக்கு நகைச்சுவை- சிந்தனை அரங்கம் நடக்கிறது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் இந்த புத்தகத்திருவிழா வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களை சேர்ந்த புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 50 ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. இந்த புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT