சென்னை,
திருச்செங்கோடு தொகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ.110 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, நிதி அமைச்சர் மரிய வில்சனிடம் அமைச்சர் அருண்ராஜ் மனு வழங்கினார். இது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் அன்புச் சகோதரர் மரிய வில்சனை இன்று சந்தித்தோம்.
திருச்செங்கோடு தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய சாலை மேம்பாட்டுப் பணிகளான திருச்செங்கோடு–கொக்கராயன்பேட்டை சாலை, திருச்செங்கோடு–அரியானூர் சாலை, திருச்செங்கோடு நகர புறவழிச்சாலை (கட்டம்–III) மற்றும் திருச்செங்கோடு–குமாரபாளையம் சாலை ஆகியவற்றிற்கான LPS/DPR தயாரிப்பதற்கு தேவையான ரூ.110 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி கோரிக்கை மனுவை வழங்கினோம்.
இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், பொதுமக்களின் போக்குவரத்து வசதி மற்றும் பயணப் பாதுகாப்பு மேம்படுவதுடன், திருச்செங்கோடு பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என்பதையும் நிதியமைச்சரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளோம்.
நிதி அமைச்சர் நமது கோரிக்கையை பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதியளித்தார்; அவருக்கு திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.