சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சீ.ரமேஷ் இன்று (22.05.2026) சென்னை, நுங்கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள இந்து சமய திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் இன்று ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும், தற்போது நடைபெற்று வரும் திருக்கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்திடும் வகையிலான பணிகள், பெருந்திட்ட வரைவு பணிகள், துறை அலுவலர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்களின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், " தமிழ்நாடு முதல்-அமைச்சர் உறுதியான, நம்பிக்கையான, தூய்மையான நிர்வாகத்தை வழங்கிட வேண்டுமென உறுதியளித்துள்ளார்கள். அதனை நாம் முழுமையாக பின்பற்றிட வேண்டும். நமது துறையின் உயர் அலுவலர்கள் முதல் திருக்கோவில் கடைநிலை பணியாளர்கள் வரை சேவை மனப்பான்மையோடு பணியாற்றிட வேண்டும். துறை சார்ந்த எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவ்வபோது தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.