தமிழக செய்திகள்

ரூ.131 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் - அமைச்சர் ஆய்வு

பேருந்து நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ரூ.131 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ராஜ்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (24.6.2026) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் ரூ.131 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர், இந்த பேருந்து நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இப்பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 57 பேருந்துகள் நிற்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள், பயணிகள் தங்குமிடம், தகவல் மையம், அவசர சிகிச்சை மையம், மருந்தகம், உணவகங்கள், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், இவை அனைத்தும் நவீன நாகரிக வசதிகள் மற்றும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு இப்பேருந்து நிலையம் ஒரு மிகப்பெரிய நன்மையாக அமையும்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌ.தியாகராஜன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் சு.பிரபாகர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் ஆ.ர.ராகுல் நாத், முதன்மை செயல் அலுவலர் ச.ப.கார்த்திகா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம் வீரப்பன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர்கள் வ.மாலதி, ம.கணேஷ் குமார், சி.எம்.டி.ஏ. கண்காணிப்புப் பொறியாளர் பாலமுருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.