சென்னை,
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ச.கீர்த்தனா தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிப்காட் தொழில் பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக மேம்படுத்திட அமைச்சர் கீர்த்தனா அறிவுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) அலுவலக கூட்ட அரங்கில் இன்று (24.06.2026) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ச.கீர்த்தனா தலைமையில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சி.அ. ராமன் முன்னிலையில் சிப்காட் சார்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அனைத்து பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அமைச்சர் ச.கீர்த்தனா பின்வரும் ஆலோசனைகளை எடுத்துரைத்தார். நமது மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு, சிப்காட் நிறுவன தொழில் பூங்காக்களை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தற்போதுள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் ரசாயனப் பொருட்களை, தகுந்த வழிமுறை மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்துவதை உறுதி செய்து, சம்பந்தப்பட்ட திட்ட அலுவலர்கள் தினசரி கண்காணித்து தலைமையிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், சிப்காட் தொழில் பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக மேம்படுத்திடவும், சிப்காட் வளாகம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள இடங்களை தேர்வு செய்து, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், விளையாட்டு திடல்களை உருவாக்கிடவும் நடவடிக்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
மேலும், சிப்காட் நிறுவனம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும், துரிதமாக செயல்படுத்திடும் வகையில் அனைத்து அலுவலர்களும் தங்குதடையின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.