சென்னை,
ஒரு அக்கா ஸ்தானத்தில்தான் மாணவிகளிடம் அமைச்சர் கீர்த்தனா பேசினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் படி, அமரிக்காவில் பெட்னாவின் ஆண்டு விழாவில் சிறப்பாக பங்கேற்று, அந்த விழாவை சிறப்பித்ததோடு மட்டுமல்லாது மீண்டும் உலக தமிழர் மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனையை மேற்கொண்டேன். வெற்றிகரமாக அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து வந்து இருக்கிறேன். இந்த பொன்னான வாய்ப்பு அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆய்வு பணி என்பது காலம் காலமாக நடைபெறுவது தான். அமைச்சர், எம்எல்ஏக்கள் ஆய்வு செய்வது மரபு தான். அதன்படியே அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதை யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். ஒரு அக்கா ஸ்தானத்தில் தான் மாணவிகளிடம் அமைச்சர் கீர்த்தனா பேசினார். அமைச்சர் வீடியோ எதுவும் எடுக்கவில்லை.
அமைச்சர் கீர்த்தனா தமிழ் வழி கல்வியில் படித்த சகோதரி தான். இன்று ஆங்கிலத்தில் நன்றாகப் பேசக்கூடிய தனித்திறமையை வளர்த்துக்கொண்டவர். அரசியல் ஆளுமை உடையவர். அங்கிருந்த மற்றவர்கள் எடுத்த காணொளி தான் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அரசு பள்ளிகளின் தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது.
தனியார் பள்ளிகள் காசு கொடுத்ததை தடுத்து, பல்லாயிரம் கோடி ஊழல் தடுக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கான அனுகூலமாக பார்க்க கூடாது. அந்த பார்வை தவறு. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக தான் பார்க்க வேண்டும். அரசு பள்ளிகள் தான் என்னுடைய கண்கள். தனியார் பள்ளிகள் வசூல் வேட்டை ஊழலில் பெருமுதலைகள் வெளியே வருவது பிடிக்காமல் சீமான் ஆதரவாக பேசுவது போல் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.