தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.5.50 லட்சம் மெட்ரிக் டன் மரபுக் கழிவுகளை ரூ.53.60 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் அகற்றும் பணியினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர், பயோ மைனிங் முறையில் அகற்றப்படவுள்ள திடக்கழிவுகளுக்கான திட்ட வரைபடத்தினைப் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனையடுத்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 40 ஆண்டுகளாக, 2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை பெருநகர சென்னை மாநகராட்சியும் மற்றும் அதை சுற்றியுள்ள பிற நகராட்சிகளும் உருவாக்கிய திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. 2011-ம் ஆண்டிற்குப் பிறகு ஆலந்தூர், வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மண்டலம் 9 முதல் 15 வரை உருவாகும் திடக்கழிவுகள் மட்டுமே பெருங்குடி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன.
பெருங்குடி குப்பைக் கிடங்கில் உள்ள 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில், 6 சிப்பங்களாக (Packages) பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா 1.0 திட்ட நிதியின் கீழ் ரூ.350.065 கோடி மதிப்பில், தரைமட்டத்திற்கு மேலாக குவிக்கப்பட்டிருந்த சுமார் 29.28 லட்சம் கனமீட்டர் மரபுவழி (Legacy) கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த பயோ மைனிங் முறையில் அகற்றி நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
28.2.2026 நிலவரப்படி, மொத்தம் 29.28 லட்சம் கனமீட்டர் மரபுக் கழிவுகளில் இருந்து 29.20 லட்சம் கனமீட்டர் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 6 சிப்பங்களில், சிப்பம் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று 94 ஏக்கர் நிலப்பரப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. சிப்பம் 6-ல் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் நடைபெற்று வருகின்றன. மார்ச் 2026 இறுதிக்குள் சிப்பம் 6-ல் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிப்பம் 1 மற்றும் 2-ல் SBM 1.0 திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்திருந்தாலும், 2025 ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் ஆய்வின் அடிப்படையில், இப்பகுதிகளில் இன்னும் மீதமுள்ள 5.50 லட்சம் மெட்ரிக் டன் மரபுக்கழிவுகளை தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் பயோ மைனிங் முறையில் அகற்ற தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.53.60 கோடி மதிப்பீட்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஒப்பந்த விதிகளின்படி குறைந்த விலைப்புள்ளி கோரிய நிறுவனத்திற்கு ரூ.51.26 கோடி மதிப்பில் பயோ மைனிங் பணிகளை மேற்கொள்ள 25.2.2026 அன்று பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான மொத்த காலவரையறை, ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து 9 மாதங்களாகும்.
மேற்கண்ட 5.50 லட்சம் மெட்ரிக் டன் மரபுக்கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டபின், சிப்பம் 1 மற்றும் 2 பகுதிகளில் சுமார் 78 ஏக்கர் நிலப்பரப்பு கூடுதலாக மீட்டெடுக்கப்படும். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்படும் இப்பணி, பெருங்குடி குப்பைக் கிடங்கின் முழுமையான மறுசீரமைப்பில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலவளமீட்பு மற்றும் நகர வளர்ச்சி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கும் முக்கிய முயற்சியாக இது அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல், மண்டலக் குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், நிலைக்குழுத் தலைவர்கள் கோ.சாந்தகுமாரி (சுகாதாரம்), பாலவாக்கம் த.விஸ்வநாதன் (கல்வி) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.