தமிழக செய்திகள்

சென்னை காசிமேட்டில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் பேச்சுவார்த்தை

மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக தொடர்வதால், காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது

சென்னை,

ஆந்திர மாநில கடலோர காவல்படையினர் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளை விடுவிக்குமாறு ஆந்திர பிரதேச மீன்வள ஆணையர் மற்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், தற்போது வரை தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

காசிமேடு மீனவர்கள்

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 24-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், ஆந்திர மாநில கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி சென்னை காசிமேடு பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

800 படகுகள்

மீனவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காசிமேட்டில் சுமார் 800 படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர். வேலைநிறுத்தத்தால் துறைமுகம் சார்ந்த வணிக செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

வெறிச்சோடிய மீன் சந்தை

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளாக தொடர்வதால், காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்கள் வரத்து குறைந்துள்ள நிலையில் ஏற்கனவே பிடித்து வைக்கப்பட்டு இருந்த மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மீனவளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT