தமிழக செய்திகள்

அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல-சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூற முடியாது என்றும், அவர் இங்கிலாந்து அரசர் அல்ல என்றும் சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத்தின் வீட்டுக்குள் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்து, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கை ரத்து செய்யக்கோரி மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அமைச்சர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

‘இங்கிலாந்து அரசர் அல்ல’

இந்த கோரிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என்று கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுகூட கோர்ட்டில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் தற்போது மாநிலத்தின் நிதியமைச்சராக உள்ளார். அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு கோர்ட்டில் ஆஜரான அவர், பதவிக்கு வந்த பிறகு மட்டும் ஆஜராக மாட்டாரா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

‘சட்டத்துக்கு மேலானவர் அல்ல’

இதனிடையே, புதுச்சேரி போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல், வேளாங்கண்ணி ஆலய கொடியேற்று நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதி, வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பும்போது அமைச்சர் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார்.மேலும், கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர் எந்த தேதியில் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராவார் என்பதை தெரிவிக்கும்படி அவரது தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.