சென்னை,
தன்னுடைய கல்வி நிறுவனத்துக்காக லஞ்சம் கொடுத்ததாக சட்டசபை யில் பேசிய அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்வதுடன், அவருடைய எம்.எல்.ஏ. சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் கமிஷனர், தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சி.ஜெனிபர் என்பவர் தன் வக்கீல் பி.விஜயேந்திரன் மூலம் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன். இவர், தற்போது மாநில நிதி அமைச்சராக உள்ளார். சமீபத்தில் சட்டசபையில் அவர் பேசும்போது தனது கல்வி நிறுவனத்துக்கு அனுமதி தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். இது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்லாமல் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும் எனவே, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.
அவர் அமைச்சராக பதவியேற்றபோது எடுத்த பதவி பிரமாணத்திற்கு முரணாகவும், தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் பதவியை திரும்ப பெற முடியாது. அதேநேரத்தில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.எனவே, அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டு வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.