தமிழக செய்திகள்

ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் ஆய்வு கூட்டம்

நமது துறையை சிறந்த துறையாக மாற்ற அனைவரும் இணைந்து பணிபுரிய வேண்டும் என அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைப்படி இன்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

இவ்வாய்வு கூட்டத்தின் போது ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஊரக பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என தெரிவித்து.

அத்தகைய ஊரகப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கக்கூடிய பணியினையும், ஊரக பகுதியில் வசிக்கக்கூடிய எண்ணற்ற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக் கூடிய ஒரு மகத்தான சேவையினை செய்யக்கூடி இத்துறையில் பணிபுரியம் அலுவலர்களுக்கு கீழ்காணும் அறிவுரைகளை வழங்கினார்கள்:-

அறிவுரை

. தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக ஊரக பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும். மேற்கண்ட பணிகளில் எவ்விதமான சுணக்கமும் இல்லாமல் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

· திட்டங்களை செயல்படுத்தும்போது பணிகளின் தரத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

· பணிகளை உரிய காலத்தில் முடித்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

· சாலைகள் மற்றும் பாலங்களின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.

· மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்து கெள்ளவேண்டும்.

· ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து, அனைவருக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

· தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு குப்பைகளை தரம்பிரித்து 100% அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

· சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பான பணிகளை எடுத்து செய்ய வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இத்திட்டத்தை விளக்கி நல்ல பல பணிகளை செய்ய வேண்டும்.

· ஊரக பகுதிகளில் உள்ள சிறுபாசன ஏரிகளை நல்ல முறையில் புதுப்பிக்க வேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வண்டல் மண் இலவசமாக வழங்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பினை செய்துள்ளார்கள். அதன் பயன் அனைவருக்கும் கிடைக்குமாறு பணிபுரிய வேண்டும். அதில் எவ்வித சுணக்கம் இன்றி புகார்களுக்கு இடமளிக்காவண்ணம் செயல்படுத்தப்பட வேண்டும்.

· ஊரகப்பகுதிகளில் உள்ள தெருக்கள் தூய்மையாக பராமரிக்கப்படுவதோடு தெருவிளக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

· மேலும், சிறுசிறு பணிகளை செய்வதற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கு தேவையான பயிற்சியையும் முறையாக வழங்க வேண்டும்.

· பணிகளின் தரத்தை உறுதி செய்ய உள்ளுரில் உள்ள படித்த பெண்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட குழுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

· எல்லா பணிகளையும் முறையாக வீடியோ பதிவு செய்து பென்டிரைவ் உடன் Bill settle செய்ய வேண்டும்.

· மேற்கண்ட அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி நமது துறையை சிறந்த துறையாக மாற்ற அனைவரும் இணைந்து பணிபுரிய வேண்டும்.

இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு செயலாளர் பிரசாந்த் எம். வடனேரே, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் பா.பொன்னையா. இ.ஆ.ப., இவ்வியக்ககத்தின் அனைத்து கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், மாவட்டங்களின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர்கள், தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.