தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் டி.கே.சிவக்குமார் செய்கிறார்; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று டி.கே. சிவகுமார் விரும்பினார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடக முதல்-மந்திரி டி.கே சிவகுமாருக்கும், மு,க.ஸ்டாலின் குடும்பத்துக்கும் கட்சியைத் தாண்டிய நல்ல உறவு இருக்கிறது. எனவே, இவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் டி.கே. சிவகுமார் செய்வார். எல்லாவற்றையும் விட திமுக குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல வகையில் டி.கே. சிவகுமார் விரும்பினார்.

காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதைவிட, டி.கே. சிவகுமார் திமுக குடும்பம், மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்பார் என்று பல தரப்பினர் சொல்லி வந்தனர். அதேமாதிரிதான் கடந்த ஒரு வாரம் நடைபெற்றது. டி.கே. சிவகுமார் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதைத்தான் திமுக சொல்கிறது. திமுக சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார்.

இதேமாதிரிதான் இவர்கள் இருவரும் சேர்ந்து கருணாநிதி காலத்திலும் ”தண்ணீர் கொடுக்காதீர்கள், தண்ணீர் கொடுத்தால் ஜெயலலிதாவுக்கு நற்பெயர் கிடைத்துவிடும்” என்று கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முட்டுக்கட்டை போட்டார்கள். அதையேதான் திமுக இப்போதும் செய்கிறது. தமிழக முதல்-அமைச்சர் தனிமைப்பட்டு நிற்கிறார் என்ற வார்த்தை தமிழக மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் தெரிவித்ததைப் போல உள்ளது.

மேகதாது விவகாரத்தில், நேற்று காலை முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனைகளை நடத்தி, உச்சச்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று முடிவு எடுத்தபோது, திமுக 5 மணிக்கு மேல் அவசரமாக வழக்குப் பதிவு செய்கிறது. இதுமாதிரி ஒரே மாநிலத்தில் பல வழக்குகளைப் பதிவு செய்தால் எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கும்? எந்த அளவுக்கு அந்த மாநிலத்தின் உரிமைகளை பின்நோக்கித் தள்ளும்.

கடந்த 5 வருடங்களாக அவர்கள் என்ன செய்தார்கள்? கடந்த 30 ஆண்டுகளாக எல்லாவகையிலும் காவிரி நீர் பிரச்னையில் குழப்பத்தை ஏற்படுத்தியது திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும்தான். இப்போதும் அதே குழப்பத்தைத் தான் ஏற்படுத்துகிறார்கள். எம்.எல்.ஏ. பேர விவகாரத்தில் பெங்களூருவில் தான் பணம் பிடிப்பட்டது.. திமுகவுக்கு பெங்களூரு பாதுகாப்பானதாக உள்ளதா?. தமிழகத்தில் 17 டி.எம்.சி. காவிரி நீர் வர வேண்டி இருக்கிறது. விநாடிக்கு 3,500 கன அடி என்பது போதாது. இவ்வாறு அவர் கூறினார்.