தமிழக செய்திகள்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் மாயமான விவகாரம் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் தொடர்பான ஆவணங்களும் காணவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்துறை சார்ந்த ஆய்வில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த மாதம் மே 16, 17 ஆகிய தேதிகளில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் சுமார் 10 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது.

அந்த ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் டெண்டர் தொடர்பான தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் மாயமான விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“திருடப்பட்ட ஆவணங்களின் தகவல்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் தொடர்பான ஆவணங்களும் காணவில்லை. மின்வாரிய அலுவலகங்களில் கணினியில் உள்ள ஆவணங்களை பத்திரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணைக்கு பின்னர் முழுமையான விவரங்கள் வெளியிடப்படும். கடந்த மாதம் சிலரை பணியிடை நீக்கம் செய்தோம். அதன் பிறகு இது நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.