சென்னை,
மின் வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை மின்வாரிய தலைமையகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, கடந்த 16-ந் தேதி, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட இந்த வெள்ளை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடி என்று கூறப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக, மின் துறையின் மொத்த நிலுவைக் கடன் மட்டும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடனான ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 176 கோடியை வைத்து கணக்கிடும்போது, மின் துறையின் கடன் அளவு 77.6 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில், மின் துறைக்கு என தனியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அத்துறையின் அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருந்தார். அதன்படி, இன்று மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டார்.
மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்து, வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் நிர்மல்குமார், கடந்த 25 ஆண்டுகளாக மின்வாரியம் கடந்து வந்த பாதை குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது:-
மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது.
2021 - 2026 வரை மின்வாரிய செலவு - ரூ.5.32 லட்சம் கோடி
2021 - 2026 வரை மின்வாரிய வருமானம் - ரூ.4.97 லட்சம் கோடி
2021 - 2026 வரை மின்வாரிய பற்றாக்குறை - ரூ.34,447 கோடி.
2001ஆம் ஆண்டு முதலான மின்வாரியத்தின் செயல்பாடுகள் வெள்ளை அறிக்கையில் உள்ளன. மின்சாரத் துறையை மீட்டெடுக்க வேண்டும். அதை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். 2001 முதல் 2006 வரை ரூ.59ஆயிரம் கோடி வருவாய், ரூ. 67ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டுள்ளது.
கட்டணம் உயர்த்தப்படும் போது அதே அளவுக்கு செலவினங்களும் உயர்த்தப்படுகிறது. செலவினங்கள் அதிகரிக்கிறது தவிர கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை. புதிய பணியாளர் தேர்வு மேற்கொள்ளப்படவில்லை
மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும்.
மின் துறையில் மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மொத்த பணியிடங்கள் 1,40,635. அதில் 74,714 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தாலும், மக்களுக்கு சிக்கல் இல்லாமல் சேவை செய்கிறோம். 2021 - 2026 வரை திமுக ஆட்சிகாலத்தில் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2021 - 2026 வரை 9,136 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். 2 மடங்காக உயர வேண்டிய வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. வளர்ச்சியை நோக்கி எந்த ஒரு திட்டமும் துவங்கப்படவில்லை.
இந்தாண்டிற்குள் 20,000 பேர் புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். 2021-26-ல் நியமிக்கப்பட்ட 5,000 கேங் மேன்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்த எந்த ஆவணங்களும் பராமரிக்கப்படவில்லை.
வருவாய் - ரூ.92,737 கோடி
செலவு - ரூ.1.28 லட்சம் கோடி
பற்றாக்குறை - ரூ.35,463 கோடி
வருவாய் - ரூ.1.92 லட்சம் கோடி
செலவு - ரூ.2.49 லட்சம் கோடி
பற்றாக்குறை - ரூ.56,361 கோடி
வருவாய் - ரூ.3.20 லட்சம் கோடி
செலவு - ரூ.3.78 லட்சம் கோடி
பற்றாக்குறை - ரூ.58,534 கோடி
2021ல் மின் வாரியத்துக்கு கேங்மேன் பணிக்காக 5,391 பேரை பணிக்கு எடுத்தார்கள். வேலை என்றாலே அதை சும்மா கொடுக்க மாட்டார்கள் என உங்களுக்கே தெரியும் அவர்களிடம் என்ன வாங்கினார்களோ வேலை தருவதாக அவர்களுக்கு ஆர்டர் கொடுத்தாகிவிட்டது.
ஆனால் அடுத்து வந்த ஆட்சியில் நீ பணம் வாங்கிவிட்டாய் என்ற சச்சரவில் அவர்களை அப்படியே விட்டுவிட்டார்கள். அவர்கள் பார்க்காத அமைச்சர் இல்லை. இத்தனை காலமாக தங்களுக்கு வேலை இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் அவர்கள் தவிக்கிறார்கள். அவர்களையும் பணியில் அமர்த்த தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
நீர் மின் மின்சாரம் மூலம் 381 மெகா வாட் மின்சாரம் கொள்முதல்.
அனல் மின் நிலையம் மூலம் 2,965 மெகா வாட் மின்சாரம் கொள்முதல். கேஸ் மூலம் 149 மெகா வாட் மின்சாரம் கொள்முதல்.
மாநிலங்களுக்கிடையே 4,240 MW மின்சாரம் யூனிட் 5.29 ரூபாய்க்கு கொள்முதல். மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் 13,566 MW மின்சாரம் கொள்முதல்.
மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் யூனிட் - ரூ.5.39க்கு கொள்முதல். சொந்தமாக 5000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை.
மின்வாரிய வரலாற்றிலேயே கடந்த ஆட்சிக்காலத்தில் தான் அதிக வருவாய் ஈட்டப்பட்டு, அதேநேரம் அதிக செலவிடல் நடந்திருக்கிறது.
2021-2026 ஆம் ஆண்டில், மின்வாரியத்திற்கு கூடுதல் வருவாய் சுமார் ரூ.67 ஆயிரம் கோடி. கடைசி ஓராண்டில் மட்டும் (2025-2026) ரூ.1.24 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் 2021-2026 ஆம் ஆண்டில், மின்வாரியத்தின் கடன் ரூ.87 ஆயிரம் கோடி.
இவ்வளவு வரவு இருந்து, செலவும் செய்து, கடனும் வாங்கி உள்கட்டமைப்புகள் பெரிதாக மேம்படுத்தப்படவில்லை.
இந்த வெள்ளை அறிக்கையின் சாராம்சம் என்னவென்றால் கடந்த காலங்களில் மக்களும் கஷ்டத்தில் இருந்தார்கள், தொழில் துறையும் கஷ்டத்தில் இருந்தது, மின் துறையும் கஷ்டத்தில் இருந்தது. யார் பலனடைந்தது என்பதுதான் தெரியவில்லை. அதைத்தான் எல்லா பக்கமும் தேடிக் கொண்டிருக்கிறோம். எல்லாமே செலவினமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் செய்த செலவுக்கு ஏற்ப எந்த கட்டமைப்பும் மேம்படுத்தப்படவில்லை.
இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது. மின்வாரியத்தில் செலவினம் இருந்திருக்கிறது. வருவாயும் கிடைத்துள்ளது. மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை.
த.வெ.க. ஆட்சியமையவில்லை என்றால் மின்வாரியம் தனியார்மயமாகியிருக்கும். மின் வாரியத்தை மேம்படுத்த வேண்டிய பணிகளில் ஈடுபடுவோம்.
டிரான்ஸ்பார்மர் மட்டுமல்லாமல் மின் கண்டெக்டர் கொள்முதலிலும் முறைகேடு நடந்துள்ளது. 9 இடங்களில் மின் கண்டெக்டர் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது.
ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 துணை மின் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. 60,000 டிரான்ஸ்பார்மர்கள் புதிதாக உருவாக்கப்படவுள்ளது. 21,74,200 புதிய மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
4000 மெகாவாட், 5000 மெகாவாட் கூட சொந்தமாக நாம் உற்பத்தி செய்யாவிட்டால், எதற்காக இவ்வளவு வேலை பார்த்திருக்கிறோம். சோலார் உற்பத்தி போன்ற பலவகைகளில் தனியார் 30,000 மெகாவாட் கூட உற்பத்தி செய்கிறார்கள். ஏன் நாம பண்ணல. நாம பண்ண வேண்டிய விஷயத்தை தனியார்களை அனுமதித்து, அவர்கள் மூலம் மின் கொள்முதல் செய்து மறைமுகம் லாபம் ஈட்டியதுதான் கடந்த 25 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. 3400 மெகாவாட் தான் நம்முடைய சொந்த உற்பத்தியாக உள்ளது
2000ஆம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேர் வேலை பார்த்த இடம். இத்தனை ஆண்டுகளில், நமது மின் தேவை, கட்டமைப்புகள், மின்வாரியத்தின் வருவாய் அனைத்தும் அதிகரித்திருகிறது. ஆகவே, இந்த பணியிடங்கள் அப்படியே இரட்டிப்பாகியிருக்க வேண்டும். ஆனால், இன்று 74,000 பேர் தான் வேலை பார்க்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு பிறகு 30 ஆண்டுகள் பின் நோக்கிப் போயிருக்கிறோம்.
டிஎன்பிஎஸ்சி மூலம் வெளிப்படைத்தன்மையுடன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணியிட மாறுதலுக்கு யாரிடமும் பணம் கொடுக்க தேவையில்லை
சூரிய எரிசக்தி திட்டங்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் ஒப்புதல் அளிக்கப்படும். தினசரி மின்தேவை மற்றும் கொள்முதலை டேஷ் போர்டு மூலம் ஒளிபரப்புகிறோம்.
* நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தித் திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல்
* அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய திட்டங்களை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவருதல்
* பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) மற்றும் பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டங்களை (PSP) ஊக்குவித்தல்
* Peak Hour மின் தேவையை சமாளிக்க நெகிழ்வான சேமிப்பு திறனை உருவாக்குதல்
* DAM / TAM / RTM போன்ற உடனடி மின் சந்தைகளின் மீதான சார்பைக் குறைத்தல்
* குறைந்த செலவிலான மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (PPA) மூலம் பற்றாக்குறைகளை சரிசெய்தல்
* மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை விரிவுபடுத்துதல்
* புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குதல்
இவ்வாறு அவர் கூறினார்.