சென்னை,
சிறுவர் முதல் பெரியவர் வரை 2 நாட்கள் வன உயிரியல் பூங்காவினுள் நுழைவு கட்டணம் செலுத்தாமலே பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வன உயிரியல் பூங்காவில் இன்றும், நாளையும் நுழைவுக்கட்டணம் இன்றி அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்ட்டது. சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா, சேலம் குரும்பபட்டி வன உயிரியல் பூங்காவில் இலவச அனுமதி அளிக்கப்பட்டும் என வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார். இதற்கான செலவு அனைத்தையும் தானே ஏற்பதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் என இரு நாளைக்கும் சேர்த்து மொத்தம் 40 ஆயிரம் நுழைவுச்சீட்டுகளும் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யப்பட்டுவிட்டன. இதற்கிடையே, ஆன்லைன் நுழைவுச்சீட்டு இல்லாமல் பொதுமக்கள் பலர் இன்று வண்டலூர் பூங்காவுக்கு வருகை தந்தனர். ஆனால் நுழைவுச்சீட்டு இன்றி பூங்காவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் ரஞ்சித் குமார் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுமதிச்சீட்டு இன்றி வரும் மக்கள் அனைவரும் இலவசமாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.