தமிழக செய்திகள்

தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற 520 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் - அமைச்சர் பர்வேஸ் வழங்கினார்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 2 முதல்வர்கள் மற்றும் 2 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

சென்னை,

சென்னை கிண்டியில் நடைபெற்ற 5-வது திறன் பட்டமளிப்பு விழாவில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 520 மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ்களை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் வழங்கினார். மேலும், 4 அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் வெல்டர், டர்னர், பிட்டர், மெக்கானிக் மோட்டார் வாகனம் போன்ற பொறியியல் பிரிவுகளிலும், தையல் தொழிற்நுட்பம், கணினி போன்ற பொறியியல் அல்லாத பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய தொழிற் தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்வு எழுதிய 19,199 மாணவர்களில் 17,645 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 91.90 சதவிதம் ஆகும்.

ஆண்டுதோறும் திறன் பட்டமளிப்பு விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அதன்படி, 5-வது திறன் பட்டமளிப்பு விழா, அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நடைபெறுகிறது.

சான்றிதழ்கள்

இன்று கிண்டி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற திறன் பட்டமளிப்பு விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையேற்று 2026-ஆம் ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற கிண்டி, கிண்டி (மகளிர்) மற்றும் திருவான்மியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 520 மாணவர்களுக்கு தேசிய தொழிற்சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 2 முதல்வர்கள் மற்றும் 2 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

இவ்விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் டாக்டர் துரை. ரவிச்சந்திரன், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT