தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் முழலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அரசலாறு (தாராசுரம் பாலம் முதல் சாக்கோட்டை பாலம் வரை ஆங்காங்கே) நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் முழலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் இன்று (06.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தெரிவித்ததாவது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மேட்டுத்தெரு கிராமத்தில் கல்லணையிலிருந்து காவிரி ஆறு மைல் 46/2ல் காவிரி – அரசலாறு இரண்டாக பிரிந்து தமிழ்நாட்டில் 72 கி.மீ நீளம் பாய்ந்து, 84773 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளித்து பின் அண்டை மாநில காரைக்கால் மாவட்டத்திற்குள் சென்று பிறகு வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதில் தற்சமயம் அரசலாறு மைல் 55/2 முதல் 59/3 வரை (தாராசுரம் பாலம் முதல் சாக்கோட்டை பாலம் வரை 6.60 கி.மீ இதன் அகலம் 40 மீட்டர் (120 அடி) ஆகும்.) ஆங்காங்கே ஆகாயத்தாமரை செடி, கொடி, கோரை, காட்டாமணக்கு மற்றும் மண்திட்டுக்களாக உள்ளதால் கீழ்பகுதிகளுக்கு பாசன நீர் முழு அளவில் செல்வது கடினமானதாகவும் மற்றும் மழை, வெள்ளகாலங்களில் தண்ணீர் வடிவது சிரமமாக உள்ளது. மேலும் ஆகாயத்தாமரை அதிகமாக வளர்ந்துவுள்ளதால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் செல்லும் அபாயம் உள்ளது.
ஆகையால் இப்பகுதியினை அவசர கால பணியாக எடுத்து மேற்காணும் அரசலாறு மைல் 55/2 முதல் 59/3 வரை சுமார் 6.60 கி.மீ ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகள் போன்றவை அகற்ற திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை பராமரிப்பு நிதியுதவியுடன் நீர்நிலைகளை பாதுகாக்கவும், அவசரகால பேரிடர் மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்தவும் ரூ.3.50 கோடி மதிப்பில் 7 புதிய அதிநவீன மண்வாரி (Poclain) இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதனை பயன்படுத்தி முதற்கட்டமாக 13.05.2026 முதல் 22.05.2026 வரை கும்பகோணம் வட்டம், சாக்கோட்டை பகுதியில் அரசலாற்றில் சுமார் 1.40 கி.மீ தூரம் ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது. பிறகு 24.05.2026 முதல் 29.05.2026 வரை தராசுரம் பகுதியில் அரசலாற்றில் சுமார் 900 மீட்டர் தூரம் ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது.
ஆகமொத்தம் 2.30 கி.மீ தூரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அரசலாற்றில் மீதமுள்ள 4.30 கி.மீ தூரம் வரையுள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணி இன்று முதல் நடைபெற்று வருகிறது.
மேலும், வேளாண் பொறியியல் துறை மூலம் சி மற்றும் டி வாய்க்கால்கள் தற்பொழுது தூர்வாரப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் கோவிலாச்சேரி கிராமத்தில் 6.9 கிலோமீட்டர் நீளத்திலும், கல்லூர் கிராமத்தில் 14.6 கிலோமீட்டர் நீளத்திலும், திருநல்லூர் கிராமத்தில் 2.6 கிலோமீட்டர் நீளத்திலும், நீலத்தநல்லூர் கிராமத்தில் 2.5 கிலோமீட்டர் என 26.65 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள் ரூபாய் 9.25 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயம் தடைபடுவதுடன் விவசாயத்திற்கு தேவையான பாசன நீர் தங்குதடை இன்றி கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை–உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் முழலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை, காவிரி வடிநில கோட்டம், தஞ்சாவூர் செயற்பொறியாளர், மா.இளங்கோ, கண்காணிப்பு பொறியாளர், எழிலன், செயற்பொறியாளர் ஐயப்பன், உதவி செயற் பொறியாளர் ஸ்ரீதர் பொறியாளர்கள் செந்தில் முருகன், கோகுல் ராஜன், பவுல்ராஜ், காவிரி வடிநில உபகோட்டம், கும்பகோணம் உதவிசெயற்பொறியாளர், கி.முத்துமணி, காவிரி பிரிவு, பாபநாசம், உதவிப்பொறியாளர் பெ.கார்த்திகேயன், அலுவலர் பிரபாகரன் நீர்வளத்துறை அலுவலர்கள், விவசாய பிரநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.