சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் தலைமையில் 25.05.2026 அன்று நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
25.05.2026 அன்று நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறைச் செயலாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் பி. என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை, நேர ஒதுக்கீட்டு முறை, பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, தரிசன மேலாண்மை மற்றும் கட்டணசீட்டு விநியோக ஒழுங்குமுறை போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், இம்முறையை முதற்கட்டமாக முதுநிலை திருக்கோயில்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பின்னர், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திருக்கோவில் நகைகள், சிலைகள், ஆபரணங்கள், திருக்கோவில் சொத்துகள் மற்றும் தொன்மையான பொருட்களை பாதுகாத்தல் ஆகியவை குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.
திருக்கோவில் நிலங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இனாம் நிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் தனிப்பட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் நடைமுறை நிலை ஆய்வு செய்யப்பட்டு, பக்தர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், மாணவர் நலன், கல்வித் தரம் மற்றும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன.
இறுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில் நிர்வாகத்தை மேம்படுத்துதல், கோவில் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் பக்தர்கள் நலனை பாதுகாத்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் சீ.ரமேஷ் அவர்கள் தெரிவித்தார்.