மதுரை,
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடக்க உள்ளது. இந்த கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவரை கோவில் இணை கமிஷனர் சுரேஷ் மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.
பின்னர் அமைச்சர், இலவச தரிசன பாதையில் சுமார் 20 நிமிடம் வரை காத்திருந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். அப்போது சில இடங்களில் ஒயர்கள் வெளியே தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதனை சரிசெய்ய உத்தரவிட்டார்.
மேலும் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு மின்விசிறி, குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சுந்தரேசுவரர் சன்னதியில் இலவச தரிசன பாதையில் பக்தர்களோடு சென்று தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அமைச்சருக்கு அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் பிரசாதம், புத்தகங்களை வழங்கினார்.
யானை மகால் அருகே குடிதண்ணீரை ஆய்வு செய்தார். தண்ணீரின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு கோவில் பணியாளர்கள் அதற்கான நோட்டை காண்பித்த போது தண்ணீரில் டி.டி.எஸ். அளவு 35 முதல் 77 வரை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டி.டி.எஸ். அளவு 150 முதல் 300 வரை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் குடிநீரின் தரத்தை தினசரி ஆய்வு செய்து சரியாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
தீ விபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஸ்தபதியிடம் எப்போது பணிகளை முடிப்பீர்கள்? என்றார். ஜூலை 15-ந் தேதிக்குள் முடித்து விடுவதாக ஸ்தபதி கூறினார். அதுகுறித்து நீங்கள் எழுதி கையெழுத்து போட்டு தருமாறு அமைச்சர் தெரிவித்தார். மண்டப பணிகளை முடித்த பிறகுதான் கும்பாபிஷேக வேலைகளை தொடங்க முடியும். எனவே மண்டப பணிகளை குறித்த தேதியில் முடிக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனாட்சி அம்மன் கோவிலில் திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க உள்ளது. திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தோம். அனைத்து பணிகளும் விரைந்து முடித்து, கும்பாபிஷேக விழா விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். 90 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துவிட்டன. மீதி பணிகளை மிக விரைவாக முடிக்க வேண்டும் என்று கூறி உள்ளோம் என்றார்.
பின்னர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ், கலெக்டர் ஆகாஷ் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்த அனைத்து துறைகளும் முழு ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். திருப்பணிகள் அனைத்தும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவுபெற வேண்டும்.
பக்தர்கள், உபய தாரர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் தனித்தனி நுழைவு. வெளியேறும் வழிகள் ஏற்படுத்த வேண்டும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கும்பாபிஷேகத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு போக்குவரத்து, பாதுகாப்பு, உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்த தகவல்களை பொது மக்கள் அறியும் வகையில் தெரிவிக்க வேண்டும். உதவி எண்ணும் அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.
அதேபோல் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். கோவில் முன்புள்ள கடைகளில் ஆய்வு செய்து பொருட்களின் விலை பட்டியல் வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், அங்கு தூய்மை பணியில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக அழகர் மலையில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலிலும், முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலை மலை முருகன் கோவிலிலும் பக்தர்களோடு வரிசையில் சென்று அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம் செய்தார்.