சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா, மற்றும் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகிய மூன்று இடங்களில் இலவச அனுமதி வழங்கப்பட்டது.
பூங்காக்களில் இலவசமாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது . இதற்கான நுழைவு கட்டணத்தை, வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் அவர்களின் குடும்ப அறக்கட்டளை தனது சொந்த நிதியிலிருந்து பூங்கா நிர்வாகத்திற்கு முழுமையாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் என இரு நாளைக்கும் சேர்த்து மொத்தம் 40 ஆயிரம் நுழைவுச்சீட்டுகளும் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யப்பட்டுவிட்டன. இதற்கிடையே, ஆன்லைன் நுழைவுச்சீட்டு இல்லாமல் பொதுமக்கள் பலர் இன்று வண்டலூர் பூங்காவுக்கு வருகை தந்தனர்.
ஆனால் நுழைவுச்சீட்டு இன்றி பூங்காவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் ரஞ்சித் குமார் ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுமதிச்சீட்டு இன்றி வரும் மக்கள் அனைவரும் இலவசமாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வண்டலுர் உயிரியல் பூங்காவில் முதல்-அமைச்சர் பிறந்தநாள் இலவச நுழைவு சீட்டினை சுமார் 35 000 க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதற்கான கட்டணத்தை வனத்துரை அமைச்சர் ஆர் வீ ரஞ்சித்குமார் அவர்களின் குடும்ப அறக்கட்டளை சார்பாக ரூபாய் 80 லட்சத்திற்கான காசோலையை நாளை மதியம் 12.30 மணியளவில் வண்டலூரில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி வழங்குகிறார் என தகவல் வெளியாகிறது.